Friday, February 17, 2012

சிலம்பொலி செலப்பனார் 85-ஆம் அகவை நிறைவு விழா

சிலம்பொலி செல்லப்பனார் எண்பத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழா செபுத்தம்பர் இருபத்துமூன்றாம் நாள் நடைபெற உள்ளது.சிலம்பொலியார் எண்பத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழாமலர் ஒன்றும் சிறப்பாக வெளிவரவுள்ளது.பேராசிரியர்கள், பாவலர்கள்,எழுத்தாளர்கள்,தமிழன்பர்கள் சிலம்பொலியார் புகழ்பாடும் படைப்புகளை ஆயத்தம் செய்க.விவரம் விரைவில்

Monday, January 19, 2009

சிலம்பொலி

சிலம்பொலியாரின் 'சிலம்பொலி"என்னும் ஆய்வுநூலுக்குக்
கலைஞர் வழங்கிய அணிந்துரை:
நண்பர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் எழுதிய 'சிலம்பொலி'என்னும் நூலைப் படித்துப் பார்த்தேன்.இந்நூலின் தொடக்கமே தொன்மையன் தமிழ் நாடக இலக்கணத்தை நாட்டு மக்களுக்கு நினைவூட்டும் தன்மையில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.மங்கல நிகழ்ச்சி நடைபெறும்போது மற்றவைகளைக்-குறிப்பாக-
எதிர்மறையானவைகளை-ஏசல்களைப்-பேசாமல் இருத்தல் நல்லது.எச்செயலைச் செய்கின்றபோதும் நல்லாட்சி செய்யும் நாடாள்பவரை எண்ணி வாழ்த்துவது பழந்தமிழர் பண்பாடு என்பதனை நண்பர் செல்லப்பன் நல்ல முறையில் எடுத்துக்காட்டியுள்ளார்.இன்று தேவையான இக்கருத்துகள் தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த உதவும் என்று நம்புகிறேன்.
இமயம்,பொதியம்,புகார் இவை மூன்றும் அழியாது எனச்சொல்லிய இளங்கோவடிகளின் வாக்குப் பொய்க்காது என்பதை வலியுறுத்த எண்ணிய ஆசிரியர்,அந்த எண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகத் தமிழக அரசு புதுப்பித்துள்ள பூம்புகாரைச் சுட்டிக்காட்டுகிறார்.
என்றோ பாடிய தமிழ்க் கவிஞனின் வாக்குக்கு இன்றைய தமிழக அரசின் சாதனையைச் சாட்சியாகக் காட்டுவது தமிழர்களுக்கெல்லாம் இன உணர்வைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.இது மட்டுமா?தமிழரின் அன்றைய அணிகலன்கள்,ஆடையின் தன்மை,அங்காடிகள், நகரமைப்பு, மன்றங்களின் தன்மை,கோயில்கள்,கொற்றவைக்கு அக்காலத்தில் செய்த ஒப்பனை,தமிழர் பண்பாடு-இப்படிப் பற்பல பண்டைத்தமிழகத்தின் செய்திகளை ஆசிரியர் அழகுறத் தீட்டியுள்ளார் இந்நூலில்!
தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின்
மேன்மையினையும் திறம்படப் பல மேடைகளில் முழங்கிவரும்-சீரிய செயல் புரியும் இவர்,இளங்கோவடிகளின் செந்தமிழ்க்காப்பியத்துள் மூழ்கித்திளைத்து,
முத்துக்குளித்து,நல்ல சிப்பிகளை மேலே கொணர்ந்து,அரிய பல நன்முத்துகளைத் தேர்ந்து,திகட்டாத இனிய கருத்தோவியமாக இந்நூலைப் படைத்துள்ளார்.
செந்தமிழர் நலம் பாடும் பைந்தமிழ்க் கருவூலமாம் சிலப்பதிகரத்தை எந்தக்கோணத்தினின்று ஆராய்ந்தாலும்,நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்க்கவைக்கும்.தமிழரின் முறையான வரலாற்றுச் செல்வமாய் மூவேந்தராண்ட முப்பெரும் நாடுகளின் வளங்காட்டும் செழும்படைப்பாய்,வாழ்வுநெறிகளை வரையறுத்து உரைத்திடும் நீதிவிளக்காய்
சுற்றுலாப் பெருமை நவின்றிடும் சுவை குன்றாச் சுவடியாய்,மொழிச் சிறப்பும் இனநலனும் மேம்படுத்தும் தீஞ்சுவை அமௌதமாய் இலங்கிடும் சிலப்பதிகாரத்தில் நானும் தோய்ந்து மனத்தைப் பறிகொடுத்தவனாதலால் இதனை நன்கு சுவைத்திட முடிகிறது.
புதையுண்ட பூம்புகாருக்குப் புத்துயிரூட்டி வரும் உணர்ச்சி பொங்கிப் பூரித்துப்
புதுப் பிரவாகமாய் ஓங்கிவரும் இந்த எழுச்சிக் காலத்தில்,ஏற்றதொரு நூலினைப் படைத்தளிக்கும் இனிய நண்பர் செல்லப்பனைப் பாராட்டி அவர்தம் முயற்சிகள் வெல்க என வாழ்த்துகிறேன்.

Saturday, November 8, 2008

நல்ல குறுந்தொகை

சிலம்பொலியாரின் “நல்ல குறுந்தொகையில் நானிலம்” என்னும் நூல்
பாரதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.(மு.ப.1959)
நிலவகை என்னும் முதல் இயலில் தமிழ் அக இலக்கணம் கூறும் நானில வகைப்பாட்டை விளக்குகிறார்.(ப.5-11)
இரண்டாம் இயல் குறிஞ்சி என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை நூலில் இடம்பெற்றுள்ள குறிஞ்சித்திணைப்பாடல்களின் உவமைநயத்தை விளக்குகிறது.(ப.12-50)
மூன்றாம் இயல் பாலை என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை பாலை நிலம் குறித்து வழங்கும் வண்ணனைகளையும் உவமைநயத்தையும் எடுத்துரைக்கிறது.(ப.51-76)
நான்காம் இயல் முல்லை என்னும் தலைப்பில் அமைந்து குறுந்தொகை வழங்கும் முல்லைநில வண்ணனைகளைத் தொகுத்துரைக்கிறது.(ப.76-90)
ஐந்தாம் இயல் மருதநில வண்ணனைகளைக் குறுந்தொகை வழங்குமாற்றை விவரிக்கிறது.(ப.90-104)
ஆறாம் இயல் நெய்தல் என்னும் தலைப்பில் குறுந்தொகை காட்டும் நெய்தல்நிலச் சிறப்பை விளக்குகிறது.(104-128)
'நல்ல குறுந்தொகையில் நானிலம்' என்னும் தலைப்பில் இந்நூல் அமைந்திருந்தாலும்
பலையையும் சேர்த்து ஐவகை நிலங்களின் சிறப்பை வழங்குகிறது.தொல்காப்பியமரபையொட்டி இந்நூல் அமைந்துள்ளமை போற்றத்தக்கது

சங்க இலக்கியத்தேன்

பத்துப்பாட்டு நூல்களைப் பற்றி இவர் ஆற்றிய பொழிவுகள்
”சங்க இலக்கியத்தேன்” என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளன.இவர் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிப் பேசிய நாள்களும் அக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களும்:
நாள்: நூல்: கூட்டத்தலைவர்
6-1-1990 திருமுருகாற்றுப்படை முனைவர் அகஸ்டின் செல்லப்பா
20-1-1990 பொருநராற்றுப்படை கவியரசர் பொன்னிவளவன்
3-2-1990 சிறுபாணாற்றுப்படை முனைவர் தி.சாம்பமூர்த்தி
3-3-1990 முல்லைப்பாட்டு பெரும்புலவர் க.பழனி பாலசுந்தரனார்
17-3-1990 மதுரைக்காஞ்சி திரு. அரு.சங்கர்
7-4-1990 நெடுநல்வாடை திரு.முகம் மாமணி
21-4-1990 குறிஞ்சிப்பாட்டு திரு.சு.இலம்போதரன்
5-5-1990 மலைபடுகடாம் கவிஞர்.இளஞ்சேரல்
16-6-1990 பெரும்பாணாற்றுப்படை திரு.க.முனிராசன் எம்.ஏ. எம்.எட்.
இப்பொழிவுகள் அன்றில் பதிப்பகத்தாரால் நூல்வடிவம் பெற்றன.
மூன்று மடலங்கள்(Volumes)கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
மடலம்-1.திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை
மடலம்-2.முல்லைப்பாட்டு,மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை
மடலம்-3.குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை,மலைபடுகடாம்
இந்நூலுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வாழ்த்துரையும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் அணிந்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
‘செல்லப்பன் போன்றவர்கள் தங்கள் முழு நேரத்தையும் இலக்கியப்பணிகளுக்காகவே செலுத்திவருவதால் இதுபோல் மேலும் பல நல்ல நூல்கள் சங்க இலக்கியங்கள் பற்றி வெளிவந்திட தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.”-கலைஞர் மு.கருணாநிதி

“இவ்விரிவுரை ஒவ்வொன்றும் கொற்கைவெண்முத்துக்களைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டி வைத்துப் பரிசளித்தது போன்றும் இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித்தட்டில்
நிரப்பி உண்ணத்தந்தது போன்றும் உளம் மகிழ்வளித்தது.”
-------பேராசிரியர் க.அன்பழகனார்

சிலம்பொலி செல்லப்பனார்

சிலம்பொலி சு.செல்லப்பனார் தமிழ்கூறு நல்லுலகில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் தமிழறிஞர்.சிலப்பதிகாரம் பற்றிய இவரது பொழிவுகள் சிலம்பொலி என்னும் சிறப்புப்பெயர் இவருக்கு வழங்கக் காரணமாயிற்று எனலாம்.மணிமேகலை,பெருங்கதை ஆகியவற்றையும் நுணுகியறிந்து கற்றுப் பரப்பிவருபவர்.சங்க இலக்கியம்,பாரதிதாசன் பாடல்கள் பற்றி அறியவிரும்புபவர்கள் இவரது பொழிவைக் கேட்டால் பெரும்பயன் பெறுவர் என்பது உறுதி.
நாடறிந்த இந்நற்றமிழறிஞர் எளியமுறையில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தமிழைப் பரப்பிவருகிறார்.பாரதிதாசன் மரபுப்பாவலர்கள் அனைவரையும் நன்கு அறிந்தவர்.இக்காலக் கவிஞர்களின் கவிதைகளை எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்பவர் இவரே.
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பெருங்கதை,சீறாப்புராணம்,இராவணகாவியம்
ஆகிய இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய தொடர்பொழிவுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.தமிழிலக்கியங்களை மேடையிலும் நூல்கள் வாயிலாகவும் பரப்பிவரும் இவரது தமிழ்ப்பணி வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும்.